தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் கெட்டுப்போன 170 டன் வெங்காயம் குழிதோண்டி புதைப்பு

திண்டுக்கல்லில் கெட்டுப்போன 170 டன் வெங்காயத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் வெங்காய விலை உயர்ந்ததைத் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய மாநில அரசு முடிவெடுத்தது. இதற்காக மத்திய கூட்டுறவு நிறுவனமான நாபெட் மூலம் நாசிக்கிலிருந்து 400 டன் வெங்காயம் கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், அவை தரமற்று இருந்ததால் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவற்றை நிராகரித்தனர்.

வெங்காயம்

இதனையடுத்து நிராகரிக்கப்பட்ட வெங்காயத்தை வெளிச்சந்தையில் ஏலம் விட முடிவெடுத்த நாபெட் நிறுவனம் அதில் 200 டன் வெங்காயத்தை திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்குக் கொண்டு வந்து 3 கடைகளில் இருப்பு வைத்தது. வெங்காயம் அழுகத் தொடங்கியதால் கடந்த 16-ஆம் தேதி கிலோ ரூ.5 என்ற மலிவு விலையில் சுமார் 30 டன்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.​வெங்காயம் அழுகியும், புழு வைத்தும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

புதைப்பு

இதன்பேரில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அழுகிய வெங்காயத்தை விற்ற கடைக்கு சீல் வைத்ததோடு, 3 கடைகளுக்கும் தலா ரூ.30 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்நிலையில் மீதமுள்ள 170 டன் வெங்காயத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசி, நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அந்த வெங்காயத்தை உடனடியாக அப்புறப்படுத்த முடிவு செய்தனர்.

வெங்காய மார்க்கெட்

அதன்படி, வருவாய் கோட்டாட்சியர் பழனிவேல், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, மாசுக்கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் திவ்யா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆரோக்கிய ஜார்ஜ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் செல்வம் ஆகியோர் தலைமையில், ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் 10 அடி ஆழக் குழி தோண்டப்பட்டு, ரூ.70 லட்சம் மதிப்பிலான அழுகிய வெங்காயம் முழுவதும் கொட்டி அழிக்கப்பட்டது.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து திண்டுக்கல் தரகுமண்டி வெங்காய மார்க்கெட் தலைவர் முருகேசன் கூறுகையில், உதவி செய்யும் நோக்கத்தில் தற்காலிகமாக இருப்பு வைக்க மட்டுமே இடம் கொடுக்கப்பட்டது. அழுகிய வெங்காய விற்பனைக்கும், திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

SCROLL FOR NEXT