மதுரை மீனாட்சி கோயில் அருகே 17 வயது சிறுவன் முன்விரோதம் காரணமாக இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக குபேந்திரன் என்ற சிறுவர் கொல்லப்பட்டுள்ளார்.
குபேந்திரனை முத்துமணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முத்துமணி, ராஜ், சதீஷ்குமார், ஹரி கிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் சேர்ந்து வணிக வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த குபேந்திரனை கொலைசெய்து முதல் தளத்திலிருந்து உடலை கீழே வீசியுள்ளனர்.
கொலையான சிறுவன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறை, கடந்தாண்டுகளோடு ஒப்பிடுகையில் மாநிலத்தில் தற்போது குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தாலும், நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 கொலை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன.
முன்விரோதம், மதுபோதை, குடும்பத் தகராறு, பணப் பரிவர்த்தனை மற்றும் கள்ளத்தொடர்பு போன்றவற்றால் திடீரென உணர்ச்சிவசப்பட்டு நடத்தப்படும் கொலைகளைக் காவல்துறையால் முன்கூட்டியே கணித்துத் தடுப்பது என்பது சாத்தியமில்லாதது என்பதால், கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.