தேனி மாவட்டத்தில் உள்ள துணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகள், ஒரு காவல்துறை அதிகாரியை தாக்கியதாக கூறப்பட்டதை அடுத்து, நேற்று (திங்கள்கிழமை) இரவு தப்பி சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தப்பிவர்களில் 16 பேரை கண்டறிந்து கைது செய்வதற்காக 17 சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தென் மண்டல காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) விஜயேந்திர பிடாரி, தேடுதல் வேட்டையின் போது தப்பி ஓடிய கைதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
"காவல் துறையினரின் தேடுதல் வேட்டையின்போது, தப்பியோடிய கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்," என்று அவர் கூறினார்.
சம்பவத்தை தொடர்ந்து பாதுகா புபடையினர் வாகனங்களில் தீவிர சோதனைகளை நடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல்லில் 16 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தினார்.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும் ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகளில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும், சிறைக்குள் நுழைந்த சிறை காவலர்களை தாக்கிவிட்டு, அவர்கள் சிறையில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்ட சிறைச்சாலையில் பணியாற்றும் தங்கபாண்டி இரண்டாம் நிலை காவலர், இச்சம்பவத்தில் தலையில் காயமடைந்து ஜி.விளக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு சிறை காவலர்களும் லேசான காயங்களுடன் தப்பியதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பித்ததை தொடர்ந்து, அண்டை மாவட்ட காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த தகவல் இடுக்கி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினருடன் பகிரப்பட்டது.
அதேவேளையில், தப்பியோடிய குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் வகையில் அவர்களின் புகைப்படங்கள் காவல்துறை அதிகாரிகளிடையே விநியோகிக்கப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய மீதமுள்ள கைதிகளை கண்டறிந்து கைது செய்வதற்கான முயற்சிகளை காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.