தமிழக செய்திகள்

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 14-வது அணிவகுப்பு விழா: முதலமைச்சர் விஜய் பங்கேற்றுப் பதக்கங்களை வழங்குகிறார்!

காவலர்கள் தமிழக காவல்துறையின் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளனர்.

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு காலம் பயிற்சி நிறைவு செய்த 14-வது பேட்ச் காவல் துணைக்கண்காணிப்பாளர்களின் கம்பீரமான பயிற்சி நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு மரியாதை நாளை (புதன்கிழமை) மிக விமரிசையாக நடைபெற உள்ளது.

சென்னை வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியக மைதானத்தில், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு காலம் பயிற்சி நிறைவு செய்த 14-வது பேட்ச் காவல் துணைக்கண்காணிப்பாளர்களின் கம்பீரமான பயிற்சி நிறைவு விழா மாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது. இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, இளம் காவல் அதிகாரிகளின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, ஓராண்டு கால பயிற்சியில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, குற்றப் புலனாய்வு, துப்பாக்கிச் சுடுதல், உடற்பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சிகளில் சிறந்து விளங்கிய இளம் அதிகாரிகளுக்குக் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வழங்கி முதலமைச்சர் வாழ்த்துரை ஆற்ற உள்ளார்.

நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த இளம் அதிகாரிகள், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நவீன தொழில்நுட்பப் பயன்பாடு, இணையவழி குற்றத்தடுப்பு, களப்பணிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு பயிற்சிகளைப் பெற்றுள்ளனர்.

இந்த அணிவகுப்பு விழாவின் மூலம் இவர்கள் அனைவரும் தமிழகக் காவல்துறையின் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளில் அதிகாரப்பூர்வமாகத் தங்கள் பணிகளைத் தொடங்க உள்ளனர். திருவள்ளுவர் ஆண்டு 2057, புரட்டாசித் திங்கள் 20-ஆம் நாளான வரும் புதன்கிழமை அன்று தமிழகக் காவல்துறையின் இந்த முக்கியப் படைப்பிரிவு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு

இவ்விழா குறித்துத் தமிழ்நாடு காவலத்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால், விடுத்துள்ள அழைப்பில், மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், பயிற்சி முடிக்கும் இளம் அதிகாரிகளின் குடும்பத்தினரும், காவல் துறை உயர் அதிகாரிகளும் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.

SCROLL FOR NEXT