140 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டம் குன்னூர்- பர்லியாறு வழியாக இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சிறப்புப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் குன்னூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ஜெயராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் பர்லியாறு பகுதியில் வாகன தணிக்கை சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அவர்கள் புதுக்கோட்டை பாண்டியராஜன் (வயது 28), ராமநாதபுரம் வீரபத்ரன் (31) என்பதும், அவர்கள் வைத்திருந்த பையில் தடைெசய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் 2 பேரும் கோவையில் உள்ள ஒரு வீட்டில் அதிகஅளவிலான புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கோவைக்கு சென்ற போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 140 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து பாண்டியராஜன், வீரபத்ரனை கைது செய்த போலீசார், அவர்களை குன்னூர் சார்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.