தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திருச்சி, மதுரை, வேலூர், தர்மபுரி உள்பட பல்வேறு நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏரிகளில்உள்ள தண்ணீர் வறண்டு வருகின்றன. தமிழ்நாட்டில் நீர்வளத்துறை பராமரிப்பில் 14 ஆயிரத்து 141 ஏரிகள் உள்ளன.
இவற்றின் மூலம் பாசனம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது நிலவும் கடும் வெயில் காரணமாக மாநிலம் முழுவதும் 1,351 ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன.
இதில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டத்தில் 380 ஏரிகள் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கின்றன. மதுரையில் 264 ஏரிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் 129 ஏரிகள் வறண்டுவிட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் 84 ஏரிகள், திருச்சியில் 82 ஏரிகள், நாமக்கல்லில் 53 ஏரிகள், தேனியில் 50 ஏரி கள், சேலத்தில் 42 ஏரிகள் வறண்டுவிட்டன.
கத்திரி வெயில்தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் மேலும் பல ஏரிகள் வறண்டு போகும் வாய்ப்பு நிலவுகிறது. நீர்வளத்துறையில் முக்கிய ஏரிகள் வறண்டு வருவதால் பல மாவட்டங்களில் பாசனம், குடிநீர் உள்ளட்ட தேவைகளை பூர்த்தி செய்வதில் இனிமேல் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள ஏரிகள் வறண்டு வரும் சூழ்நிலை உருவாகி வருவதால், பறவைகள் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.