தமிழக செய்திகள்

ரூ.100 கோடி மதிப்புள்ள 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - தவெக மாவட்ட நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், தவெக மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினருமான பூபாலன் (42) என்பவரை, போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைது செய்துள்ளது.

இன்று காலை 7 மணிமுதல் கீழப்பிடாகை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த சர்வதேச ரக போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 100 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாகி பூபாலன் மற்றும் அவரது நண்பர் சுகன் உள்ளிட்ட இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

இதனைத் தொடர்ந்து, பூபாலனை கட்சியிலிருந்து நீக்கி தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக நாகை மாவட்ட கட்சி செயலாளர் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த திருப்பூண்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் பூபாலன் என்பவர் மீது உயர்ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில், அவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக போதைப்பொருள் (NCB) மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதன் காரணமாக, பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.

இனி வரும் காலங்களில் அவருக்கும் நமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, நாகை மாவட்டக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவருடன் கட்சி ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT