தமிழக செய்திகள்

உச்சிப்புளி கடற்கரையில் தடை செய்யப்பட்ட 130 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் தமிழகத்திலிருந்து தனுஷ் கோடி கடல் வழியாக கடல் அட்டை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை சிலர் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து இந்திய கடலோர காவல் படை மண்டபத்தை சேர்ந்த வீரர்கள் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான 130 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படை வீரர்கள் அந்த கடல் அட்டைகளை பதுக்கி வைத்தவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.