தமிழக செய்திகள்

தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது - அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

பழுதானதால் கடலில் திசைமாறி படகு சென்றதாக தமிழ்நாடு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதிகளைப் பெற்ற பிறகு, மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளனர்.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, படகில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது பலத்த நீரோட்டம் காரணமாகப் படகு நெடுந்தீவு கடல் பகுதியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடனே மீனவர்கள் படகை இந்தியக் கடல் பகுதிக்கு திருப்ப முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அங்குவந்த வந்த இலங்கை கடற்படை ரோந்துப் படையினர் அவர்களை வழிமறித்து, சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியதாகக் குற்றம் சாட்டி, 11 மீனவர்களையும் கைது செய்து அவர்களது விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு மீனவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும், அதனைத் தொடர்ந்து எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று கைது செய்யப்பட்ட 11 தமிழ்நாடு மீனவர்களையும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் விஜய், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை உடனடியாக மேற்கொண்டு, கைதானவர்களையும், படகையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் இப்பிரச்சனை குறித்து கூட்டு செயல்பாட்டுக் குழு மூலமாக இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை விரைவாக நடத்துவது மட்டுமே, இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் மீண்டும் நிகழாவண்ணம் தீர்வுகாண உதவும் என்பதையும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.