அண்மையில் நடந்து முடிந்துள்ள 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனால், சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்பட உள்ளது.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
வாட்ஸ்-அப் செயலி (ஆப்) வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ்அப் செயலியில் 7845252525 என்ற எண்ணிற்கு, "Hi' என பதிவிட்டு பின்னர் வரும் செய்தியில் 'Directorate of Government Examinations' என்ற துறையின் பெயர் மற்றும் தேர்வர்களின் வகுப்பினை தெரிவு செய்தால் தொடர்ந்து வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து அனுப்பினால், தேர்வர்களின் தேர்வு முடிவுகள் அதே வாட்ஸ்-அப் செயலியில் உரையாடல் மூலம் கண்டறியலாம். வாட்ஸ்-அப் செயலியில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளும் வசதி இந்த ஆண்டு முதன் முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.