ராமேசுவரத்தில் 108 அடி உயரத்தில் கட்டப்பட்டு வரும் ஆஞ்சநேயர் சிலை திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் உருவான வரலாற்றில் ஆஞ்சநேயர் மிக முக்கிய இடம்பெறுகிறார். எனவே ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரையில் வடமாநில அறக்கட்டளை மூலம் ரூ.100 கோடியில் 108 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலை கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
இந்த பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பாதத்தில் இருந்து தலை வரையிலும் ஆஞ்சநேயர் சிலை முழுவதும் கான்கிரீட் மூலம் கட்டி சிமெண்டு பூச்சு முடிவடைந்துவிட்டன. தற்போது முகத்தை வடிவமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உப்பு காற்நால் சிலை சேதமடைவதை தடுக்கும் வகையல் ரசாயனம் கலந்த சிமெண்டு பூசி, அதற்கான வர்ணங்கள் மூலம் சிலையை வடிவமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த 108 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இலங்கையை நோக்கி பார்ப்பதை போன்று கட்டப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்துக்குள் இந்த சிலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி ராமேசுவரம் வந்து திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதன்பின்பு ராமேசுவரம் வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் குஜராத், சிம்லா ஆகிய 2 இடங்களில் ஆஞ்சநேயர் சிலை கட்டப்பட்டு திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.