மணிமுத்தாறு அருவி மற்றும் களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. மாஞ்சோலை தேயிலை தோட்டப்பகுதியில் விடாது பெய்து வரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. அம்பை, சேரன்மகாதேவி, ராதாபுரம், களக்காடு, மூலக்கரைப்பட்டி, திசையன்விளை, வள்ளியூர், வீரவநல்லூர், முக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதிகபட்சமாக அம்பாசமுத்திரத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மணிமுத்தாறு அருவி மற்றும் களக்காடு தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நம்பியாறு அணைப்பகுதியில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 51 அடியை நெருங்கியுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 48 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 70 அடியை கடந்துள்ளது. 118 அடி கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 62 அடியை நெருங்கி உள்ளது.
தென்காசி மாவட்டத்திலும் தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவியிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஐந்தருவியிலும், மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்காக மாறி உள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவியிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பலத்த மழை கொட்டியது. திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய கடலோர பகுதிகளில் விடிய விடிய இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அங்கு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த 2 பகுதிகளிலும் தலா 11 ½ செ.மீ. மழை பெய்துள்ளது. கோவில்பட்டி மற்றும் சாத்தான்குளத்தில் தலா 7 செ.மீ., குலசேகரப்பட்டினத்தில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது. சூரங்குடி வைப்பாறு, ஓட்டப்பிடாரம் மணியாச்சி, காடல்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதலே கனமழை கொட்டித் தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இன்று காலையிலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால், மக்கள் வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கினர். குமரி மாவட்டத்தில் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. திற்பரப்பு அருவியில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்குள்ள நீச்சல் குளத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் திற்பரப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர் மழை காரணமாக அருமநல்லூர்- தெரிசனங்கோப்பு இணைப்பு சாலையை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.