சென்னை:
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், ராஜஸ்தானில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.
கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டியனை நாதுராம் துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என முதலில் கூறப்பட்டது.
ஆனால் பெரியபாண்டியனை சுட்டது சக போலீசான முனிசேகர் என்பது தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளி நாதுராமை ஒரு மாதத்துக்கு மேலாக தேடி வந்தனர்.
இதற்கிடையே, நாதுராம் தனது பேஸ்புக் பக்கத்தில் கையில் துப்பாக்கியுடன் தில்லாக போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது. இதையடுத்து, ராஜஸ்தான் போலீசார் விரைந்து செயல்பட்டு நாதுராமை குஜராத்தில் கைது செய்தனர். அவரை தமிழக போலீசில் ஒப்படைக்க முடிவானது.
இந்நிலையில், நகைக்கடை கொள்ளை குற்றவாளியான நாதுராமை, தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான நாதுராமை ராஜஸ்தான் போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரை தமிழகத்துக்கு கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதையடுத்து, ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானம் மூலம் நாதுராம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் என தெரிவித்தனர்.