செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் துரைக்கண்ணு

தமிழக அரசு தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு அய்யம்பேட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எய்ம்ஸ் மருத்துவமனையை தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் கடிதம் கொடுத்திருந்தார். எனவே அவர் விரும்பியபடி தஞ்சை மாவட்டத்தில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய தேவையான இடவசதி, குடிநீர் வசதி ஆகியவை இந்த பகுதியில் தான் உள்ளது.

மேலும் அருகிலேயே தேசிய நெடுஞ்சாலை, விமான நிலையம், ரெயில் நிலையம் இவற்றோடு இயற்கையான சூழ்நிலையும் இணைந்து இப்பகுதியில் தான் உள்ளது. இந்த மருத்துவமனை தஞ்சை மாவட்டத்தில் அமைவதால் டெல்டா மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் விரைவாக வந்து மருத்துவ சிகிச்சை பெற்று செல்வதற்கு எளிதாக இருக்கும்.

எனவே தமிழக அரசு தஞ்சை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடர் அமைதியான முறையில் நடைபெறும். அந்த கூட்டத் தொடரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அவை உடனே செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.