செய்திகள்

பிளாஸ்டிக் அரிசி பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றி பொதுமக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மாலை மலர்

இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக திடீர் வதந்தி பரவியுள்ளது.

முதலில் வட மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது.

அதற்கு மறுநாள் (வியாழக்கிழமை) தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை நடைபெறுவதாக பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படும் காட்சிகள் பரவி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியது. வாட்ஸ்-அப் குழுக்களிலும் பிளாஸ்டிக் அரிசி விற்பனை பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டன.

இதையடுத்து வியாழக்கிழமை மதியம் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “தமிழ்நாட்டில் அரிசி தட்டுப்பாடு இல்லை. எனவே பிளாஸ்டிக் அரிசி உள்ளே நுழைய வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டில் எங்காவது பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக தகவல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அமைச்சர் காமராஜ் இவ்வாறு விளக்கம் அளித்த பிறகும் பிளாஸ்டிக் அரிசி தொடர்பான பரபரப்பு ஓயவில்லை. நேற்று 3-வது நாளாக பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாக வதந்திகள் பரவியது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர்.

சுமார் 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். அரிசி விற்கும் கடைகள், ரைஸ்மில்கள், அரிசி உணவு தயாரிக்கும் ஓட்டல்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. ஆனால் எந்த ஒரு இடத்திலும் பிளாஸ்டிக் அரிசி பிடிபடவில்லை.

இந்த நிலையில் சென்னை அயனாவரம் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை உணவகத்தில் பிளாஸ்டிக் அரிசியை சமைத்து உணவு பரிமாறப்பட்டதாக புகார் எழுந்தது. ஊழியர்களில் சிலர் இந்த புகாரை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பணிமனைக்கு சென்று அரிசி உணவை பறிமுதல் செய்து ஆய்வு செய்தனர். கிண்டி ஆய்வுக் கூடத்துக்கும் அந்த உணவு அனுப்பப்பட்டது.

சோதனையில் அது பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது உறுதியானது.

இதற்கிடையே தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி எங்கும் இல்லை என்றும், அது பற்றி சமூக வலைத் தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி இல்லை. அது இங்கு நுழையவும் முடியாது. சிலர் இந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். என்றாலும் மக்கள் நலன் கருதி தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் அரிசி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாராவது பிளாஸ்டிக் அரிசி விற்பதாக தகவல் கிடைத்தால் அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும். தமிழக அரசு இந்த வி‌ஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாது.

சிலர் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் பிளாஸ்டிக் அரிசி தயாரிப்பு படங்களை பகிர்ந்து பரப்பி வருகிறார்கள். அப்படி வதந்தி பரப்புவது மாபெரும் குற்றமாகும். அவர்கள் யார் என கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.