செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளின் சிறப்பு ஓய்வூதியம் உயர்வு: தமிழக அரசு உத்தரவு

சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக அரசு சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு மாதாந்திர ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு மாதம் தோறும் 12,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மாதம் தோறும் 6,000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுதந்திர போராட்ட தியாகிகளின் ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது:

சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டு வரும் ஓய்வூதியம் 12,000 ரூபாயில் இருந்து 13,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சிறப்பு ஓய்வூதியம் 6,000 ரூபாயில் இருந்து 6,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் வழித்தோன்றல், முத்துராமலிங்கம், விஜயநகர சேதுபதி ஆகியோரின் குடும்பத்தினர், வ.உ.சிதம்பரனார் பேரனின் மனைவி உள்ளிட்ட பலர் இந்த உயர்வால் பயனடைவார்கள். இந்த சிறப்பு ஓய்வூதிய உயர்வு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின உரையின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.