சென்னை:
சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டார். மிண்ட், பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகல் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதனையடுத்து, பெருங்களத்தூர் சென்ற அவர் அங்கு மழை பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். பள்ளிக்கரணையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது:-
தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக நகரின் சில பகுதிகளில் நீர் தேங்கியது. மாநகராட்சி பணியாளர்கள் விரைந்து செயல்பட்டதன் காரணமாக சாலைகளில் தேங்கிய மழைநீர் உடனே அகற்றப்பட்டது.
31 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக மழை நீர் அகற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நிரந்தர தீர்வை கோரியுள்ளனர், அதற்கேற்ப வடிகால் அமைக்கும் பணிகள் விரைந்து செயல்படுத்தப்படும்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்
இவ்வாறு பேசினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.