செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20 சதவீத சம்பள உயர்வு - மதுபானங்கள் விலையும் அதிகரிப்பு

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பளத்தை உயர்த்தவும், மதுபானங்கள் விலையை அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

மாலை மலர்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் அடிப்படையில் சம்பள உயர்வு மற்றும் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க அலுவலர் குழு ஒன்றை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த குழு தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்க தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர். காலை 11.15 மணிக்கு கூடிய கூட்டத்தில் 7-வது ஊதியக்குழு சிபாரிசு மற்றும் அலுவலர் குழு அளித்த பரிந்துரைகள் ஆகியவற்றை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பகல் 12.50 மணிக்கு கூட்டம் முடிந்தது.

அமைச்சரவை கூட்டத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. டாஸ்மாக் வருவாயை அதிகரிக்க வேண்டுமானால், பீர் மற்றும் குவார்ட்டர் விலையை உயர்த்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி மதுபானங்கள் விலை உயர்கிறது. பீர் விலை ரூ.10 உயர்த்தப்படுகிறது. குவார்ட்டர் பாட்டில் விலை ரூ.12 உயர்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

7-வது ஊதியக்குழு சிபாரிசுகள் மற்றும் அலுவலர் குழு அறிக்கையை அமல்படுத்துவதற்கான காலம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பளம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எந்த தேதியில் இருந்து சம்பள உயர்வு வழங்கப்படும் என்பது இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சுகாதார பணிகள் மேற்கொள்வது பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

டெங்குவை கட்டுப்படுத்த ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், விழிப்புணர்வு ஆகியவை பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.