68-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில் 8-வது மற்றும் கடைசி நாளான நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே அணி 100-71 என்ற புள்ளி கணக்கில் சத்தீஷ்கார் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. ரெயில்வே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது இது 28-வது முறையாகும். கேரளா அணி, கர்நாடகாவை சாய்த்து 3-வது இடம் பிடித்தது. தமிழக அணிக்கு 5-வது இடம் கிடைத்தது.
ஆண்கள் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 94-86 என்ற புள்ளி கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி 10-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தமிழக அணியில் ரிகின் பெதானி 25 புள்ளிகள் சேர்த்தார். இந்தியன் ரெயில்வே அணி, பஞ்சாபை வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்தது.
பெண்கள் அணியினருக்கான பரிசளிப்பு விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியின் வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பரிசு கோப்பையை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ.2 லட்சமும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.1 லட்சமும், 3-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப் பட்டது. ரெயில்வே அணியில் இடம் பிடித்து ஆடிய தமிழக முன்னணி வீராங்கனை அனிதா பால்துரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.