பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய, மாநில அரசுகள் போதை பொருள் ஒழிப்பு நாளை கடைபிடிக்கின்றன. ஆனால் பான், குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றதாக தமிழக அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பெயர் இடம்பெற்று இருப்பது வருந்தத்தக்கது.
இதேபோல் சிலை கடத்தல், விற்பனை விவகாரத்திலும் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் தொடர்புடைய அமைச்சர் மற்றும் போலீசார் பெயர் வெளியிடப்பட வேண்டும். தமிழக முதல்-அமைச்சர், இதில் தனிக்கவனம் செலுத்தி லஞ்சம் பெற்றது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் போதைப் பொருள் கிட்டங்கி கண்டு பிடிக்கப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் போதைப் பொருள் பிடிபட்டது. எனவே போதைப் பொருள் பழக்கத்தை தடுக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நதி நீர் இணைப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது கடிதம் எழுதியுள்ளார். 10 ஆண்டுகளாக மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், கூட்டணியில் அங்கம் பெற்றிருந்தபோது இதனை ஸ்டாலின் தெரிவிக்காதது ஏன்? என்பது வியப்பாக உள்ளது.