காந்திய மக்கள் இயக்க நிறுவன தலைவர் தமிழருவி மணியன் நேற்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. தற்போது 3 அணிகளாக பிரிந்து உள்ளது. பதவிக்காக தான் அவர்கள் பிரிந்து காணப்படுகிறார்கள். அ.தி.மு.க. மீண்டும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2 நிபந்தனைகள் விதிக்கிறார். சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கூறுகிறார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு மறுபடியும் முதல்-அமைச்சர் பதவி கொடுத்தால் இவற்றை எல்லாம் மறந்து விடுவார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பதவிக்காக தான் அடிக்கடி பிரதமரை டெல்லியில் போய் சந்திக்கிறார்கள். நீட்தேர்வு, விவசாயிகள் பிரச்சனைக்காக அவர்கள் பிரதமரை சந்திக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி தானாக கலைந்து விடும். 6 மாதங்களுக்குள்ளாக அது நடக்கும். ஆட்சி கவிழ்ந்தால் தான் தமிழக மக்களுக்கு நல்லது.
மேலூரில் டி.டி.வி. தினகரன் நடத்தும் பொதுக்கூட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டால் அது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும். ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் வயோதிகம் போன்றவற்றால் தமிழக அரசியலில் வெற்றிடம் காணப்படுகிறது. இந்த நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதல்-அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் தான் போட்டி வரும். அ.தி.மு.க. கரைந்து விடும். பி.ஜே.பி. கரையேறாது.
ஜெயலலிதா மரணத்தில் எனக்கும் சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி பெண்கள் தான். கடைக்கோடி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் கூட ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என்று நினைக்கிறார்கள். எனவே பெண்களின் வாக்கு அ.தி.மு.க.விற்கு விழாது. மாறாக ரஜினிக்கு அந்த வாக்குகள் விழும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.