சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்து ஆளுனர் ஆணையிட்டுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்நியமனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது; திரும்பப் பெறப்பட வேண்டியதாகும்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மிகப்பெரிய மோசடியாகும். துணைவேந்தர் பதவிக்கு நேற்று நேர்காணல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நேற்று முன்தினமே புதிய துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்படுவதாக செய்திகள் வெளியாயின. சூரப்பாவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
துணைவேந்தர் பதவிக்கு தேர்வுக்குழு பரிந்துரைக்கும் 3 பேர் பட்டியலில் உள்ளவர்களிடம் ஆளுனர் நேர்காணல் நடத்தி, அதன் அடிப்படையில் தான் துணைவேந்தரை தேர்வு செய்வதாக ஒரு மாயை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தகுதி அடிப்படையில்தான் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்றால் நேர்காணலுக்கு முன்பாகவே சூரப்பா தான் துணைவேந்தர் என்று செய்தி பரவியது எப்படி? ஒருவேளை இது யூகம் என்றால் கூட சூரப்பாவே இதை உறுதி செய்தது எப்படி?
ஆளுனர் மாளிகை செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதைப் போன்று சூரப்பா மெச்சத்தக்க நிர்வாகியோ, கல்வியாளரோ அல்ல. வழக்கமாக இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்படுவோருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், பஞ்சாப் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்ட சூரப்பாவை அந்த பதவியில் தொடரத் தகுதியற்றவர் என்று கூறி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது.
இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தமிழரல்லாத ஒருவரை தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதை எந்த வகையிலும் ஏற்கமுடியாது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் ஒருவர் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட வேண்டுமானால் அவருக்கு அடிப்படைத் தமிழ் மொழியறிவு இருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. உதவிப் பேராசியருக்கே இந்த நிலை எனும் போது தமிழே தெரியாதவரை துணை வேந்தராக நியமிப்பது எந்த வகையில் நியாயம்?
தமிழகத்தில் தலைசிறந்த கல்வியாளர்கள் ஏராளமாக இருக்கும் போது இன்னொரு மாநிலத்தைச் சேர்ந்தவரை இறக்குமதி செய்து துணைவேந்தராக நியமிப்பதை எப்படி ஏற்க முடியும்.
இசைப்பல்கலைக் கழகத்திற்கு கேரளப் பெண்மணி, சட்டப்பல் கலைக் கழகத்திற்கு ஆந்திராக்காரர், அண்ணாப் பல்கலைக்கழகத்திற்கு கன்னடக்காரர் என்று இறக்குமதி செய்வது தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களை அவமானப்படுத்தும் செயலன்றி வேறு இல்லை.
இத்தகைய அவமதிப்புகளும், அத்துமீறல்களும் தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் இத்தகைய செயல்களை ஒருபோதும் நிலை நிறுத்த முடியாது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதை தமிழக ஆளுனர் ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய மறுத்தால் அவருக்கு அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது. இந்த அநீதிக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும். சூரப்பா கர்நாடகத்துக்கு திருப்பி அனுப்பப்பட வில்லையென்றால் பா.ம.க.வும் மாணவர்களைத் திரட்டி போராடும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணைவேந்தர் பணி நியமனங்களில் புரையோடிப்போன ஊழல், நாடறிந்த ரகசியம் ஆகும். தமிழகத்தில் தகுதியும், திறமையும், அனுபவமும் வாய்ந்த பேராசிரியர் பெருமக்கள் பலர் விண்ணப்பித்ததை அலட்சியப் படுத்திவிட்டு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக எம்.கே. சூரப்பாவை அமர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
இவற்றை நோக்கும் போது ஆளுநரின் அதிகார ஆதிக்கம் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராகவே இருக்கிறது என்பதை உணர முடிகிறது.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக நியமித்து இருப்பதைத் திரும்பப் பெறவேண்டும். தமிழகத்தில் செயல்படும் பல்கலைக் கழகங்களுக்கு தமிழக கல்வியாளர்களையே துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க வேண்டும்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழக மக்களை வஞ்சிக்கிறோம் என்று கர்நாடக வாக்காளர்களுக்கு எடுத்து காட்டி அதன் மூலம் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு ஆதரவை பெருக்கிக் கொள்வதற்காகவே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயல் மூலம் தமிழக மக்களின் தன்மானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஊனப்படுத்தியுள்ளார். தமிழக ஆளுநராக தொடர்வதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்துவிட்டார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போதைய தமிழகத்தில் உள்ள ஒரு நெருக்கடியான சூழலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமிழக கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
எனவே இனிமேல் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றுவதற்கு அது எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பணியில் பணியாற்ற தமிழ் மக்களுக்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும் என்பதில் தேர்வுக்குழுவும், அரசும் உறுதியாக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.