கோப்புபடம் 
செய்திகள்

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் பாம்பு பராமரிக்கும் ஊழியர் ராஜநாகம் கடித்து பலி

கேரளாவில் உயிரியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பலியான முதல் ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 55 ஏக்கர் பரப்பளவில் பழமையான உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 1857-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, பாம்பு உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.

இங்குள்ள 3 அறைகளில் ஏராளமான வி‌ஷ தன்மையுள்ள பாம்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 3 ராஜநாகங்களும் உள்ளது. இந்த பூங்காவில் உள்ள பாம்புகளை பராமரிக்கும் பணியில் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்த ஹர்சாத் (வயது45) என்ற ஊழியர் ஈடுபட்டு வந்தார்.

இவர் நேற்று பாம்புகளின் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதற்காக ஒரு அறையில் உள்ள பாம்புகளை மற்றொரு அறையில் அடைத்தார். பின்னர் அறைகளை சுத்தம் செய்து விட்டு ராஜநாகங்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது ராஜநாகம் அவரை திடீர் என்று கடித்தது.

இதில் அவர் நுரைதள்ளிய நிலையில் அங்கேயே மயங்கி கிடந்தார். அவரை தேடி வந்த சக ஊழியர்கள் அவர் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஹர்சாத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ராஜநாகம் கடித்து பலியான ஹர்சாத்துக்கு ஸ்ரீஜா என்ற மனைவியும், ஆதின் என்ற மகனும் உள்ளனர். அவர்களுக்கு கேரள வனத்துறை அதிகாரிகள் ஆறுதல் தெரிவித்தனர்.

கேரளாவில் உயிரியல் பூங்காவில் ராஜநாகம் கடித்து பலியான முதல் ஊழியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ராஜநாகம் ஒருமுறை கடித்தால் 20 பேரை கொல்லும் அளவிற்கு தீவிர வி‌ஷத்தன்மை கொண்டதாகும்.