கமுதி:
கமுதி அருகே அபிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பாப்பனம் கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகன் அங்கமுத்து (வயது20). இவர் 17 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதல் செய்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு சென்ற அங்கமுத்து காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த பெண்ணின் பெற்றோர்கள் அங்கமுத்துவின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அங்கமுத்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அபிராமம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுராமன் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார்.