பெரம்பூர்:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மகபூப் பாஷா (வயது 29). இவருடைய மனைவி ஆயிஷா (19). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகபூப் பாஷா வேலைக்கு செல்லாமல் பித்து பிடித்ததுபோல் வீட்டில் இருந்தார். அங்குள்ள தர்காவில் மந்திரம் ஓதி பார்த்தும் சரியாகவில்லை.
இதனால் அவரது மனைவி ஆயிஷா, செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் கோதண்டபெருமாள் கோவில் தெருவில் உள்ள சாமியார் சங்கர் (49) என்பவரிடம் அழைத்துச் சென்றார். அவர், மகபூப் பாஷாவுக்கு பேய் பிடித்துள்ளதாகவும், அதை விரட்ட 10 நாட்கள் அங்கேயே தங்கி பூஜை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.
அதன்படி ஆயிஷாவும் கணவருடன் அங்கு தங்கி இருந்தார். இதற்கிடையில் மகபூப்பாஷா திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவரை சாமியார் சங்கரே, ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மகபூப் பாஷா உயிரிழந்தார்.
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் 6 மாதங்களுக்கு பிறகு மகபூப்பாஷாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் மகபூப்பாஷாவின் தலையில் பலமாக தாக்கப்பட்டதால் மூளைக்கு செல்லும் ரத்த குழாய் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருப்பது தெரிந்தது.
மேலும் உடலிலும் பல இடங்களில் காயம் இருந்ததாகவும், இதில் நரம்புகள் அறுபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஆயிஷா, சாமியாரிடம் சென்றதில் இருந்து தனது கணவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்து இருந்தார்.
இதையடுத்து சாமியார் சங்கரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர், பேய் விரட்டுவதாக கூறி மகபூப்பாஷாவை 10 நாட்கள் தங்க வைத்து தினமும் பிரம்பால் அவரை தாக்கியதும், இதற்காக ஆயிஷாவிடம் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வாங்கியதும் தெரியவந்தது.
இதையடுத்து வண்ணாரப்பேட்டை போலீசார் மர்ம சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றி, பேய் விரட்டுவதாக கூறி மகபூப் பாஷாவை பிரம்பால் தாக்கிய சாமியார் சங்கரை, 6 மாதங்களுக்கு பிறகு கைது செய்து சிறையில் அடைத்தனர்.