திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் செல்வகண்ணன் (வயது23), டிரைவர்.
நேற்று பகலில் இவர் நண்பர்களுக்கு பிரியாணி-மது வாங்கி கொடுத்தார். நள்ளிரவில் புளியம்பட்டி மந்தை பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தினார்.
இந்த நிலையில் இன்று காலை செல்வகண்ணன் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் வில்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பேரையூர் டி.எஸ்.பி. சரோஜா தலைமையில் போலீஸ் மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வகண்ணன் நள்ளிரவில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. மோதல் முற்றவே செல்வகண்ணனை தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. அவரை எதற்காக கொன்றார்கள்? என்ற விவரம் தெரியவில்லை. கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமராஜ் (65) என்ற முதியவர் உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.