சென்னை:
சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 35). இவர், தனது நண்பர்களான கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சொரி சுரேஷ் (30), தேனாம்பேட்டையைச் சேர்ந்த அசோகன் (30) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு பாண்டிபஜார் கிருஷ்ணசாமி தெருவில் உள்ள மதுக்கடை பாரில் மது அருந்தினார். போதை அதிகமானதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அசோகன், சொரி சுரேஷ் இருவரும் சேர்ந்து செந்திலை அடித்து உதைத்தனர். அவர் அடி தாங்காமல் உயிர் தப்பிக்க மதுக்கடை பாரில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தார்.
பின்னால் விரட்டி வந்த அவர்கள், சாலையில் கிடந்த கான்கிரீட் கல்லை எடுத்து செந்திலின் தலையில் போட்டு தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த செந்தில், பரிதாபமாக இறந்து போனார். அவரது உடல் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த பாண்டி பஜார் போலீசார், சொரி சுரேஷ், அசோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். சொரி சுரேஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பவத்தன்று மாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணிவரை வயிறுமுட்ட மூவரும் மது அருந்தினர். போதை அதிகமானதால் ஏற்பட்ட சண்டை கொலையில் முடிந்துவிட்டது. மது அருந்துவதற்கு முன்பு நண்பர்களாக சென்றவர்கள், மது அருந்திய பிறகு போதை மயக்கத்தில் எதிரிகளாக மாறி ஒரு உயிர் பறிக்கப்பட்டது. இருவர் சிறைக்கு போய்விட்டன.