நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள திருப்பாம்புரம் கீழத் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் பிரபு (வயது36). நேற்று மதியம் பிரபு திருப்பாம்புரத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளிக்க சென்ற பிரபு வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடி குளத்துக்கு சென்றனர்.
அப்போது குளத்தில் பிரபு மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். உயிரிழந்த பிரபுவுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இது குறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.