மதுரை:
மதுரை சுப்பிரமணியபுரம் அரிஜன காலனியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 28). இவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா முன்கள தடுப்பு பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 8-ந்தேதி நண்பர்களுடன் வெளியூரில் இருந்து காரில் மதுரை திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது சுப்பிரமணியபுரத்தில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் திருப்பதியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த திருப்பதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்ட ஆதிதமிழர் பேரவை சார்பில் “திருப்பதியை தாக்கிய போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரை பணிநீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், மனித உரிமைகள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆணையங்கள் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்” என்று கோரி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த நிலையில் திருப்பதியை தாக்கியதாக ஜெய்ஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரை ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.