கோப்புபடம் 
செய்திகள்

ஏற்காட்டில் கள்ள துப்பாக்கியுடன் வாலிபர் கைது

ஏற்காடு அருகே கள்ள துப்பாக்கியுடன் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்காடு:

ஏற்காடு அருகே உள்ள மாரமங்கலம் பஞ்சாயத்து குட்டமாத்திக்காட்டு பகுதியை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ்(வயது40). இவர் கள்ள துப்பாக்கி வைத்திருப்பதாக சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி. உத்தரவின்பேரில் ஏற்காடு சப்-இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் மைக்கேலின் வீட்டுக்கு சென்றனர். அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது கோழி அடைக்கும் கூண்டில் கள்ள துப்பாக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மைக்கேலையும் போலீசார் கைது செய்தனர்.

மைக்கேல் கள்ள துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது ஏன்? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. விலங்கினங்களை வேட்டையாடும் நோக்கத்தில் வைத்திருந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.