கைது 
செய்திகள்

துடியலூர் அருகே உறவினரை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபர் கைது

கோவை துடியலூர் அருகே உறவினரை அடித்து கொன்று நாடகமாடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாலை மலர்

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 39). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. அதனால் சரியாக வேலைக்கு எங்கும் செல்லாமல் சுற்றித் திரிந்து வந்தார்.

இவரது பாட்டி சரஸ்வதி என்பவர் அப்பநாயக்கன்பாளையம் சித்ர அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகிறார். அங்கு பத்மநாபன் அடிக்கடி வந்து சாப்பிட்டுவிட்டு குடிப்பதற்கு பணம் கேட்டு சரஸ்வதியிடம் தகராறு செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றும் பத்மநாபன் குடிபோதையில் சரஸ்வதி வீட்டுக்கு வந்தார். அங்கு சாப்பிட்டுவிட்டு மீட்டு குடிப்பதற்கு பணம் கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த சரஸ்வதியின் மகன் கண்ணன் (44) பத்மநாபனை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

ஆனால் அவர் அங்கிருந்து செல்ல மறுத்து கண்ணனிடமும் தகராறில் ஈடுபட்டு அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் அங்கு இருந்த கல்லை எடுத்து பத்மநாபனை தாக்கினார்.

இதில் அவர் அங்கேயே மயங்கிக் கீழே விழுந்தார். மேலும் ஆத்திரம் தீராத கண்ணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து மீண்டும் சரமாரியாக பத்மநாபனை தாக்கினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

அவர் இறந்ததை தெரிந்துகொண்ட கண்ணன் கொலையில் இருந்து தப்பிக்க எதுவும் தெரியாதது போல பத்மநாபனின் உடலை வெளியே கொண்டு வந்து போட்டார். பின்னர் அவர் தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு கிடப்பதாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து நாடகமாடினார்.

அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பத்மநாபன் இறந்துவிட்டதாக தெரிவித்து அங்கிருந்து சென்றனர். இதனால் பீதியில் இருந்த கண்ணன் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரிடம் சென்று நடந்தவற்றை கூறி தன்னை காப்பாற்றும்படி கதறினார்.

ஆனால் ஜெகதீஷ் அது தவறு என கண்ணனை சமாதானப்படுத்தி துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளிசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பத்மநாபனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.