கைது 
செய்திகள்

நிலத்தகராறில் விவசாயி கொலை- வாலிபர் கைது

பெரியகுளம் அருகே நிலத்தகராறில் விவசாயியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பெரியகுளம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள போடாங்குளம் கண்மாய்கரை பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). விவசாயி. இவருக்கு கண்மாய் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலையில் இவரது நிலத்திற்கு பக்கத்தில் அதே பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பவருடைய நிலமும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை செல்வம் வழக்கம்போல் தனது நிலத்திற்கு சென்று வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது முருகன் தனது நிலத்திற்கு சென்றார். அங்கு முருகன் மீண்டும் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் கையில் வைத்திருந்த அரிவாளால் செல்வத்தின் காலில் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த செல்வத்தின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் ஊருக்குள் நடந்து சென்று கொண்டிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர்.

இறந்த செல்வத்திற்கு சக்கரையம்மாள் என்ற மனைவியும், பானுப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.