தற்கொலை 
செய்திகள்

திருமணமான ஓராண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பூரில் திருமணமான ஓராண்டில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் என்.ஆர்.கே. புரம் 3-வது வீதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுபஜனா (வயது 24). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.

இந்தநிலையில் இன்று அதிகாலை சுபஜனா தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருமணமாகி ஓராண்டே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுபஜனா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. குடும்ப பிரச்சனையில் தற்கொலை செய்தாரா? அல்லது வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்தாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.