நெய்வேலி:
சேலம் அருகே உள்ள கெங்கைவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 52). இவர் நெய்வேலி புதுநகர் 29-வது வட்டம் பகுதியில் வசித்து, 2-வது அனல்மின் நிலையம் 6-வது யூனிட்டில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று இரவு 2-வது அனல் மின்நிலைய சுரங்கத்தில் இருந்து நிலக்கரி எடுத்து வரும் கன்வேயர் பெல்ட்டு பகுதியில் பணியில் இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சக்திவேல் கன்வேயர் பெல்டில் சிக்கினார். இதனால் அவர் கூச்சல்போட்டார். சத்தம்கேட்டு மற்ற ஊழியர்கள் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சக்திவேல் பெல்ட்டில் சிக்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த என்.எல்.சி. உயர் அதிகாரிகளும் வந்தனர். இறந்து போன சக்திவேல் உடல் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.