விறகு அடுப்பில் சமையல் செய்து மாதர் சங்கத்தினர் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்திய போது எடுத்த படம். 
செய்திகள்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி போராட்டம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து விறகு அடுப்பில் சமையல் செய்து பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

கோவை:

கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 15 நாட்களில் ரூ.100 வரை உயர்ந்து ரூ.710-க்கு வினியோகம் செய்யப்படுகிறது. கியாஸ் உயர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை ஆவாரம்பாளையம் நேதாஜி நகரில் நேற்று விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தனர். பின்னர் அவர்கள், சிலிண்டரை சுற்றி நின்று ஒப்பாரி வைத்து, கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் ஜோதிமணி தலைமை தாங்கி பேசும் போது, ஏற்கனவே கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் சீர்குலைந்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் குறைந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்து உள்ளதால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றார். இதில், நிர்வாகி அமுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கி பேசும் போது, மக்களை பாதிக்கும் கியாஸ் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

இதில் சோமசுந்தரம், சாஜித், ஜீவானந்தம், வேலுசாமி, கல்பனா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை விண்ணை தொடுவதை குறிக்கும் வகையில் பலூன்களில் சமையல் எரிவாயு விலையை எழுதி பறக்க விட்டனர்.