திருச்செந்தூர்:
திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஏராளமான பனைமரங்கள் உள்ளன. பனை தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக கிராமங்களில் பனையில் இருந்து சீசன் மாதமான மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி வரை பதனீர் கிடைக்கும்.
இந்த பதனீரில் இருந்து கருப்பட்டி மற்றம் கற்கண்டு தயாரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள்.
பதனீர் சீசன் முடிந்ததும் பனை ஓலையில் இருந்து விதவிதமாக கை வண்ணத்தில் பொருட்கள் தயாரிக்கின்றனர். குறிப்பாக மிட்டாய் பெட்டி, கூடைகள், கருப்பட்டி. கீ-செயின்கள் (கிளி, ஸ்டார்) என பலவகையான பொருட்கள் இந்த பகுதி மக்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-
அரசு பிளாஸ்டிக் கேரிபேக், கப் போன்றவைகளை பயன் படுத்தக்கூடாது என தடைவிதித்து அதை தீவிரப்படுத்தி கடைகளில் ஆய்வு செய்து அவற்றை பறிமுதல் செய்து அபதாரங்கள் விதித்தனர்.
அந்த நேரங்களில் எங்கள் தயாரிப்பு பொருட்களான பனைஓலையில் தயாரான மிட்டாய் பெட்டிளை அதிக அளவில் வியாபாரிகள் வாங்கி சென்றார்கள். அதை அந்த வியாபாரிகள் இனிப்பு கடைகளில் மிட்டாய் வைத்து விற்பதற்கும், ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை பார்சல் செய்யவும் வாங்கினார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக பனை ஓலை பொருட்கள் விற்பனை மந்தம் ஏற்பட்டுள்ளது. எனவே பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே பிளாஸ்டிக் பொருட்களை தீவிரமாக கண்காணித்து அதனை தடைசெய்ய வேண்டும். அதற்கு மாற்றாக எங்கள் பனைபொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யவேண்டும். மேலும் இதற்கென தனி வாரியம் இந்த பகுதியில் அமைத்து கொள்முதல் செய்து எங்கள் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என கூறினர்.
பனை நாரில் இருந்து கட்டில்கள், நார்பெட்டிகள் என பல வகையான கைவினை தயாரிப்புகள் திருச்செந்தூர் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சங்கிவிளை, அடைக்கலாபுரம், வீரபாண்டியன்பட்டணம், மணப்பாடு, உடன்குடி போன்ற பகுதிகளில் ஏராளமான பெண்கள் குடிசை தொழிலாக இதை செய்து வருகின்றனர்.
இந்த தொழிலை ஊக்கப்படுத்த பனைகள் அதிகமாக உள்ள இந்த பகுதியில் கிராமங்களில் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கவேண்டும். அதற்கென பயிற்சி பள்ளிகள் தொடங்கவேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.