தற்கொலை 
செய்திகள்

பெண் என்ஜினீயர் தற்கொலை- வேறு பெண்ணை மணந்த காதலன் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

எலச்சிபாளையம்:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 23 வயதான பெண் என்ஜினீயர் ஒருவர் சென்னை சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்து வந்தார்.

திருச்செங்கோடு எஸ்.இறையமங்கலம் பொய்யேரி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமியின் மகன் மணிகண்டன் (23). என்ஜினீயரான இவர் பள்ளிபாளையத்தில் உள்ள காகித ஆலையில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

பெண் என்ஜினீயரும், மணிகண்டனும் ஒரே பள்ளியில் படித்தபோது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதை பயன்படுத்தி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மணிகண்டன், பெண் என்ஜினீயருடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மணிகண்டன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதாக தெரிகிறது. இதுகுறித்து அறிந்த பெண் என்ஜினீயர் மணிகண்டனிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டன் பெண் என்ஜினீயருடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இதில் மனமுடைந்த பெண் என்ஜினீயர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனிடையே கடந்த 1-ந் தேதி மணிகண்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அந்த பெண் என்ஜினீயர் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் ‘தனது சாவுக்கு காரணம் மணிகண்டன் தான்’ என்று அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்திருந்தார்.

நேற்று காலை மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் தற்கொலைக்கு காரணமான மணிகண்டனை கைது செய்யக்கோரி ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாலை 3 மணி வரை நீடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மொளசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மணிகண்டனை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று உறவினர்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பெண் என்ஜினீயரின் தற்கொலைக்கு காரணமான மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்துவிட்டு வெறு பெண்ணை திருமணம் செய்து காதலன் ஏமாற்றியதால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்செங்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.