நீதிமன்றம் 
செய்திகள்

காதலிக்க மறுத்ததால் பெண் என்ஜினீயருக்கு கத்திக்குத்து- வாலிபருக்கு ஆயுள் தண்டனை

காதலிக்க மறுத்ததால் பெண் என்ஜினீயரை கத்தியால் குத்திய வாலிபருக்கு ஆயுள்தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

மாலை மலர்

சென்னை:

சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சேலையூர் ராஜகீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (வயது 24) என்பவருடன், அந்த பெண் பழகி வந்துள்ளார்.

இந்தநிலையில் ஹேமந்த்குமார், அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார்.

இதன்பின்பு, அந்த பெண் தியாகராயநகரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

இதை அறிந்த ஹேமந்த்குமார், வேலைக்கு செல்லும் வழியில் அந்த பெண்ணை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். செல்போன் மூலமும் தொந்தரவு செய்துள்ளார்.

அப்போதும் காதலை ஏற்க மறுத்த அந்த பெண், ‘உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன், என்னை பின்தொடர வேண்டாம்' என்று ஹேமந்த்குமாரிடம் கூறி உள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹேமந்த்குமார், 29.5.2015 அன்று அந்த பெண் வேலைக்கு சென்றபோது அவரை வழிமறித்து கத்தியால் குத்தினார். இதில் அந்த பெண்ணுக்கு பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள், அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்பு அந்த பெண் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து சவுந்தரபாண்டியனார் அங்காடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹேமந்த்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எல்.ஸ்ரீலேகா, ‘கொலை முயற்சி வழக்கில் கொடுங்காயம் ஏற்படுத்தினால் அதிகபட்ச தண்டனையான ஆயுள்தண்டனை வரை வழங்கலாம் என சட்டத்தில் உள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடலின் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியதில் கொடுங்காயம் ஏற்பட்டது. எனவே, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த்குமாருக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள்தண்டனை வழங்க வேண்டும்' என்று வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஹேமந்த்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு அதிகபட்ச தண்டனையான ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.