கொலை 
செய்திகள்

தூத்துக்குடியில் மனைவியை எரித்துக் கொன்ற ரவுடி

தூத்துக்குடியில் மகள் திருமணத்திற்கு உதவியதால் ஆத்திரமடைந்த ரவுடி மனைவியை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துரைசாமிபுரம் காட்டுப்பகுதியில் நேற்று பெண் உடல் எரிந்த நிலையில் கிடந்தது.

சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் விரைந்து சென்று பார்வையிட்டார்.

இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்த விளாத்திகுளம் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தருவைகுளம் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் முனியசாமி. இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இவரது மனைவி முருகலட்சுமி (வயது 40). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு கடந்த 22-ந் தேதி நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்தில் முனியசாமிக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு தாய் முருகலெட்சுமி ஆதரவாக இருந்துள்ளார். இதனால் மனைவி மற்றும் மகள் மீது முனியசாமிக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இது தொடர்பாக கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த முனியசாமி மனைவியை அரிவாளால் வெட்டிகொலை செய்துள்ளார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் முருகலட்சுமி உடலை காட்டுப் பகுதிக்கு எடுத்து வந்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டு தப்பி ஓடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தலைமறைவான முனியசாமியை தனிப்படை போலீசார் வலைவீசி தெடி வருகின்றனர்.