அசாமில் ஓட்டு போட வரிசையில் நிற்கும் வாக்காளர்கள் 
செய்திகள்

மம்தா போட்டியிடும் நந்திகிராமில் உச்சக்கட்ட பதட்டம்- மேற்கு வங்காளம், அசாமில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

2 மணி நிலவரப்படி அசாமில் 48.26 சதவீத வாக்குகள், மேற்கு வங்காளத்தில் 58.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

மாலை மலர்

கொல்கத்தா:

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தேர்தலோடு சேர்ந்து மேற்கு வங்காளம், அசாம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடை பெறுகிறது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் வருகிற 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும், அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப் பட்டு இருந்தது. இரு மாநிலங்களிலும் முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. அப்போது மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 30 தொகுதிகளிலும், அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 47 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

இன்று இரு மாநிலங்களிலும் 2-வது கட்ட தேர்தல் நடக்கிறது. அசாமில் 39 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகள் என 69 தொகுதிகளில் இன்று காலை 7 மணியில் இருந்து விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

அசாமில் இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகள் தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள இடங்களாகும். எனவே அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளும் பதட்டமானவை. எனவே அங்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளிலும் சுமார் 75 லட்சம் பேர் ஓட்டுப் போடுகிறார்கள். 197 பேர் தேர்தல் களத்தில் நிற்கின்றனர். 10 ஆயிரத்து 620 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே பதட்டம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு இருந்தன. எனவே 651 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்தி கிராம் தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதியில் 355 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அனைத்துமே பதட்டம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டன. இதனால் அந்த தொகுதியில் மட்டுமே 22 கம்பெனி மத்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் டிரோன் கேமரா, ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் கண்காணிக்கப்பட்டன.

மம்தாவை எதிர்த்து மிக சக்தி வாய்ந்த வேட்பாளராக கருதப்படும் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இவர் மம்தா பானர்ஜிக்கு நீண்ட காலமாக அரசியல் உதவியாளராக இருந்தவர். ஆனால் சமீபத்தில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

தொகுதியில் சுவேந்து அதிகாரியின் குடும்பத்தினருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. எனவே மிகவும் பதட்டமான நிலை நிலவுகிறது. இன்று காலையில் இருந்தே பல இடங்களிலும் வன்முறை நடந்தது. திரிணாமுல் காங்கிரஸ் பூத் ஏஜெண்டு ஒருவரை வீடு புகுந்து தாக்கினார்கள். வீடு சூறையாடப்பட்டது.

அதேபோல மற்றொரு ஏஜெண்டை வாக்குச்சாவடிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். மேற்கு மிட்னாப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் படு கொலை செய்யப்பட்டார்.

மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரசுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. கடந்த தேர்தலில் 23 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று இருந்தது. 5 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சி வெற்றி பெற்று இருந்தது. காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி தலா 1 இடங்களில் வென்று இருந்தன.

அசாம் மாநிலத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 39 தொகுதிகளில் 4 மந்திரிகள், துணை சபாநாயகர் ஆகியோர் களத்தில் உள்ளனர். அசாமில் அடுத்ததாக 6-ந்தேதி 3-வது கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் இங்கு தேர்தல் நிறைவு பெறுகிறது.

மேற்கு வங்காளத்தில் மட்டும் இந்த மாதம் 29-ந் தேதி வரை மேலும் 6 கட்ட தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. அசாமில் 2 மணி நிலவரப்படி 48.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மேற்கு வங்காளத்தில் 58.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.