கோப்புபடம் 
செய்திகள்

தென்காசி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

சுரண்டை நகராட்சியுடன் குலையநேரி பஞ்சாயத்தை இணைப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி தென்காசி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

தென்காசி:

கடையநல்லூர் யூனியனுக்கு உட்பட்ட குலையநேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தற்போது புதிதாக அறிவிக்கப்பட்ட சுரண்டை நகராட்சியுடன் எங்களது கிராமத்தை இணைப்பதாக தகவல்கள் வந்துள்ளன. அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் எங்களது கிராமத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் ஏராளமானோர் உள்ளனர். நகராட்சியுடன் இணைக்கும்போது கிராமத்திற்கு கிடைக்கும் சலுகைகள் எங்களுக்கு கிடைக்காது. வரி சுமை அதிகமாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பும் கிடைக்காது. எனவே இந்த கிராமத்தை சுரண்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலஞ்சி தி.மு.க. செயலாளர் முத்தையா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் ஆகியோர் கொடுத்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

இலஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த அரங்கம் முந்தைய தி.மு.க. ஆட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் ரூ.19.28 லட்சம் செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த அரங்கம் தனியார் ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்டு குறைந்த குத்தகை மட்டும் இலஞ்சி பேரூராட்சிக்கு செலுத்தப்பட்டு அதனை முறையாக பராமரிக்கவும் செய்யாமல் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சிலர் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

SCROLL FOR NEXT