லஞ்ச ஒழிப்பு போலீசார் சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 
செய்திகள்

சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 மணி நேரம் சோதனை

சேலம் கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட புரோக்கர்களை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

சேலம்:

சேலம் உடையாப்பட்டி அருகே கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆர்.டி.ஓ.வாக ஜெயகவுரி உள்ளார். இந்த அலுவலகத்தில் வாகன பதிவு, லைசென்ஸ் கொடுப்பது உள்பட பல பணிகளுக்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர்கள் நரேந்திரன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை அலுவலகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

அப்போது ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குள் இருந்த 10-க்கும் மேற்பட்ட புரோக்கர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு 12 மணி வரை நடந்த இந்த சோதனையின் போது கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது. தொடர்ந்து இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.