விபத்து பலி 
செய்திகள்

வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் பலி

வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பேக்கரி கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜாக்கமங்கலம்:

வெள்ளிச்சந்தை அருகே சரல் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஸ்டான்லி தாஸ் (வயது 42). இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். ஜார்ஜ் ஸடான்லி தாஸ் பேக்கரி கடை நடத்தி வந்தார். மேலும், சொந்தமாக மினி டெம்போ வைத்து ஓட்டி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு தொழில்களிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், வேறு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்தார்.

இந்த நிலையில் ஜார்ஜ் ஸ்டான்லி தாஸ் நேற்று முன்தினம் மதியம் தனது மோட்டார் சைக்கிளில் மேலசங்கரன்குழிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பேயோடு பகுதியில் செல்லும் போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது, மோட்டார் சைக்கிளின் சைடு ஸ்டாண்டு திடீரென கீழே தட்டியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜார்ஜ் ஸ்டான்லி தாசுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜார்ஜ் ஸ்டான்லி தாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து அவரது தம்பி ஜார்ஜ் ஆன்டனி தாஸ் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.