பொங்கலூர்:
வேன் மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது மகன் முத்துப்பாண்டி (வயது 24). இவரது மனைவி மஞ்சுளா (20). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த கொடுவாய் பகுதியில் தங்கி அந்த பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மோட்டார்சைக்கிளில் கொடுவாய் கடை வீதிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முத்துப்பாண்டி பரிதாபமாக இறந்தார். மஞ்சுளாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குஅவினாசி பாளையம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் பலியான முத்துப்பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மஞ்சுளா சிகிச்சைக்காக திருப்பூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.