திருப்பதி கோவில் 
செய்திகள்

வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.28 கோடி வருவாய்

வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.28 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

மாலை மலர்

திருப்பதி:

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

வரும் 25-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசலை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 20 ஆயிரம் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்கள் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.11 ஆயிரம் மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.22 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

சிறப்பு தரிசனத்திற்காக ரூ.300 கட்டணத்தில் 2 லட்சம் டிக்கெட்கள் ஆன்லைனில் ஏற்கனவே வெளியிடப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை வெளியான சில மணி நேரங்களில் விற்று தீர்ந்தது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு மொத்தம் ரூ.6 கோடி வசூலாகியுள்ளது.

மொத்தம் வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் ரூ.28 கோடி வருவாய் வந்துள்ளது.

உள்ளூர் பக்தர்களின் வசதிக்காக 24-ந்தேதி திருப்பதியில் 5 இடங்களில் 1 லட்சம் இலவச தரிசன டிக்கெட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் உரிய முன்பதிவு டிக்கெட்களை வைத்திருக்க வேண்டும்.

மேலும் தங்குவதற்கும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்துகொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

தரிசன டிக்கெட்கள் இன்றி திருமலைக்கு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.