வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்பட்டது 
செய்திகள்

24 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் இயக்கம்

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

மாலை மலர்

மதுரை:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்க கடந்த மாதம் 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பயணிகளின் பாதுகாப்பு கருதி மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலும் கடந்த 8-ந்தேதி முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் கூடுதல் கட்டணத்துடன் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

ஆனால் இதற்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து சிறப்பு ரெயில்கள் அடுத்தடுத்து ரத்து செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் அரசு அறிவித்த ஊரடங்கு விதிகளின்படி இ-பாஸ் விண்ணப்பித்து ரெயில், விமானங்களில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கடந்த 8-ந்தேதி முதல் ரத்து செய்யப்பட்டிருந்த வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.

முன்னதாக ரெயில் நிலையம் வந்த பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நுழைவு வாயிலில் பயணிகள் கைகளை கழுவ கிருமிநாசினி வைக்கப்பட்டிருந்தது.

இன்று இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணம் செய்தனர். பெரும்பாலான பெட்டிகளில் இருக்கைகள் காலியாக இருந்தன.

இந்த ரெயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தவர்களும், ரெயில் புறப்படும் முன் புதிதாக முன்பதிவு செய்தவர்களும் பயணம் செய்தனர்.

ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களை பயணிகளின் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.