விபத்து பலி 
செய்திகள்

வடவள்ளி அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து முதியவர் பலி

வடவள்ளி அருகே மோட்டார் சைக்கிள் டயர் வெடித்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

வடவள்ளி:

கோவை மாவட்டம் வடவள்ளி அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்தவர் நித்தியானந்த் (வயது 55). இவர் நேற்று மதியம் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளிக்கு சென்றார்.

மளிகை பொருட்களை வாங்கிய பின் அவர் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது மோட்டார் சைக்கிளின் பின் பக்க டயர் வெடித்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது. அந்தசமயம் தொண்டாமுத்தூரில் இருந்து வடவள்ளி நோக்கி மினி டெம்போ எதிரே வந்து கொண்டிருந்தது.

அந்த டெம்போ மீது நித்தியானந்த் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் டெம்போவின் பின் சக்கரத்தில் நித்தியானந்த் சிக்கி நசுங்கினார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடுவதை பார்த்த பொதுமக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

நித்தியானந்த்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து அவரது உடலை வடவள்ளி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தின் போது நித்தியானந்த் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்று இருக்கிறார். அவர் ஹெல்மட் அணிந்திருந்திருந்தால் காயத்துடன் தப்பியிருக்க வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து வடவள்ளி பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.