நீரில் மூழ்கி பலி 
செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலி

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

உளுந்தூர்பேட்டை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பரிந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் மதன் (வயது 11). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவந்தான். நேற்று மாலை வெளியே சென்ற மதன் இரவுவரை வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சியடைந்த முருகன் தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்குதேடியும் மதன் கிடைக்கவில்லை.

இன்று காலை அந்த பகுதியில் உள்ள ஏரியில் மதன் பிணமாக மிதந்தான். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். பதறிபோன அவர் ஏரி பகுதிக்கு விரைந்தார்.அப்போது தனது மகன் உடலை பார்த்து முருகன் கதறி துடித்தார்.

இதுகுறித்து எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் மாணவன் மதன் ஏரியில் தவறிவிழுந்து இறந்திருப்பது தெரியவந்தது.