ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நம்பியான் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது ஒரு இடத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. பாதுகாப்பு படையினரை கண்டதும் அவர்கள் சரமாரியாக சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கி சண்டை நீடித்தது. பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை முற்றுகையிட்டு சரமாரியான தாக்குதலை நடத்தினார்கள்.
இன்று காலை 6 மணிக்கு துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருவரும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.