சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் வைகுண்டம் (வயது 70). இவர் அங்குள்ள ஒரு சமையல் கியாஸ் ஏஜென்சியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாக வில்லை. அவர் தனது வீட்டில் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார். அந்த ஏஜென்சியில் சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியில் திருவேங்கடம் வீரணாபுரத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் (25), நெல்லை தாழையூத்தை சேர்ந்த காளி (35) ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழுதடைந்த சிலிண்டரை பசுபதி பாண்டின் மற்றும் காளி ஆகியோர் லோடு ஆட்டோ மூலம் வைகுண்டம் வீட்டிற்கு எடுத்து வந்தனர். அங்கு வைகுண்டம் தனது சமைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் கியாஸ் கசிவு ஏற்பட்டு திடீரென்று வெடித்து சிதறியது. இதில் அங்கிருந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. சிலிண்டர் வெடித்து தீப்பிடித்த காட்சிகள் அருகில் உள்ள வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைராகி வருகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை வைகுண்டம் மற்றும் காளி ஆகியோர் உயிரிழந்தனர். பசுபதி பாண்டியனுக்கு தீவிர சிகிச்சையளிக்கபட்டு வருகிறது. இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.